Saturday, August 13, 2011

மஹதி பிறந்தாள்

13 Aug 2011

அன்புள்ள கிரிஜா,

2008 அக்டோபர் மாதத்தில், ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.சுபா இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறாள் என்பதே அது.நீ இருந்திருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாய் ? எனது சந்தோஷத்தின் நடுவே கவலையும் வந்தது. அவளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்,அவள் ப்ரசவம் நல்ல முறையில் நடந்து அவளையும், குழந்தையையும் நல்லபடியாக மகேஷிடம் ஒப்படைக்கவேண்டுமே , என்று.

நீ என்னுடன் இல்லாத குறை அன்று மீண்டும் பூதாகாரமாக தெரிந்தது. இருந்தாலும், நீ அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையும் இருந்தது. உன் இடத்தில் சுதா இருந்து கொண்டு,எனக்கு தைரியம் சொன்னாள். நான் இருக்கிறேன், கவலைபடாதே அப்பா என்று.அதே மாதிரி சுபாவை, ஒரு தாய் மாதிரி பார்த்துக்கொண்டாள்,ப்ரசவத்திற்கு முன்னாலும்,பின்னாலும்.

நீ இல்லாத குறை சுபாவிற்கும் நிறைய இருந்திருக்கும்.ஆனால். அவளும்,அதை வெளியில் காட்டி கொள்ளாமல்,தைரியமாக இருந்தாள்.

2009 மே வரை பூனாவிலேயே இருந்தாள். நானும் அவளுடன் இருந்து, என்னாலான சிறு உதவிகளை செய்து தந்தேன்.2009 ஜூன் மாதம், சென்னைக்கு வந்தாள். சுதாவிற்கு ப்ரசவம் பார்த்த டாக்டர் சரோஜா ராமனாதன் தான், சுபாவிற்கும் பார்த்தாள். சென்னை வந்ததும் செக் அப் செய்து, எல்லாம் நார்மலாக இருப்பதாக கூறினார்.ஜூலை 10ம் தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்றும் சொன்னார்.

ஜூன் கடைசியில், செக் அப் செய்துவிட்டு, குழந்தை பூரண வளர்ச்சி பெற்றுவிட்டது, ஆனால்,சிசேரியன் தான் செய்ய வேண்டும், எனவே ஒரு நல்ல நாள் பார்த்து, hospital ல் அட்மிட் ஆகி விடும்படி கூறினார். அதன்படி, ஜூலை 4ம் தேதி-சனிக்கிழமை- நல்ல நாளாக இருந்ததால், அன்று காலை நான், சுதா, மகேஷ், சந்தர் அவளை கூட்டிசென்று, மைலாப்பூர் இசபல் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். பிற்பகல் 1250 க்கு அவளுக்கு, சுக ப்ரசவம் ஆகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

பேத்தி பிறந்த சந்தோஷமும்,அவளை பார்க்க நீ இல்லையே என்ற வருத்தமும் ஒரு சேர வந்து,அழுதேன். எல்லோரும், நீயே வந்து பிறந்திருக்கிறாய் என்று சொன்னார்கள். அப்படியா கிரிஜா ? குழந்தை பார்க்க அழகாக இருந்தாள்.

5ம் நாள் சுபா, குழந்தை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்கள். 11ம் நாள் புண்யாகவாசனம் நம் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.வழக்கம் போலவே, நம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சுபா , குழந்தையை ஆசிர்வாதம் செய்தார்கள்.

குழந்தைக்கு, சீதாலஷ்மி, மஹதி என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைக்கு நாய் காசு, தாயத்து செய்து போட்டேன்.குழந்தையை கொண்டு விடும் போது Gold Chain வாங்கி போட்டேன்.கடவுள் அருளால், குழந்தை எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

ஆகஸ்டு மாத கடைசியில் சுபா குழந்தையை, மகேஷின் அண்ணா குமார் வீட்டில் சுதா சந்தர் கொண்டு விட்டனர். ( எனக்கு ஆபரேஷன் நடந்து இருந்ததால், நான் போக முடியவில்லை ).

ப்ரசவத்திற்கு உதவிக்காக, ரமணாவும், சாவித்திரியும் வந்திருந்து சுதாவிற்கு துணையாக இருந்து சுபாவையும், குழந்தையையும்,வீட்டையும் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி.

கடவுள் கிருபையாலும் உன் ஆசியாலும், ஒரு முக்கிய கடமை நல்லவிதமாக முடிந்தது.
நன்றி.

மீண்டும் சந்திப்போம்,

உன் அன்புள்ள

சுகவனம்

No comments:

Post a Comment