Friday, April 20, 2012

தர்ஷிணி பிறந்தாள்



நான் Bypass Operation முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்த சமயம், 2009 ஆகஸ்ட் 12ம் தேதி இன்னொரு மகிழ்ச்சியான விஷயத்தை சுதா எனக்கு சொன்னாள்.ஆம், அவள் இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்ற விஷயம் தான் அது. 7 வருடங்களுக்கு பிறகு,தனுஷுற்கு தம்பியோ, தங்கையோ பிறக்கப் போகிறான்/ள் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீ இருந்திருந்தால், இன்னமும் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் ? எனது சந்தோஷத்தின் நடுவே கவலையும் வந்தது. அவளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்,அவள் ப்ரசவம் நல்ல முறையில் நடந்து அவளையும், குழந்தையையும் நல்லபடியாக சந்தரிடம் ஒப்படைக்கவேண்டுமே , என்று.

நீ என்னுடன் இல்லாத குறை அன்று மீண்டும் ஒருமுறை பூதாகாரமாக தெரிந்தது. இருந்தாலும், நீ அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையும் இருந்தது. உன் இடத்தில் சுபா இருந்து கொண்டு,எனக்கு தைரியம் சொன்னாள். நான் இருக்கிறேன், கவலைபடாதே அப்பா என்று.அதே மாதிரி சுதாவை, ஒரு தாய் மாதிரி பார்த்துக்கொண்டாள்,ப்ரசவத்தின் போதும், பின்னாலும்.

நீ இல்லாத குறை சுதாவிற்கும் நிறைய இருந்திருக்கும்.ஆனால். அவளும்,அதை வெளியில் காட்டி கொள்ளாமல்,தைரியமாக இருந்தாள்.பிப் 18, 2010 வரை அவள், அவள் வீட்டிலேயே இருந்து கொண்டு வீட்டு வேலைகளையும், தன் உடம்பையும் பார்த்துக்கொண்டாள். பிப் 18 அன்று, நான் அவளை நம் வீட்டிற்கு அழைத்து வந்தேன். மாதத்திற்கு ஒரு முறை checkup சென்று வந்து, எல்லாம் நார்மலாக இருப்பதை உறுதி செய்துகொண்டோம்.டாக்டர், அதே சரோஜா ராமனாதன் தான் ( ஆனால், ப்ரசவத்தன்று, டாக்டர் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், ப்ரசவத்தை, அவருக்கு தெரிந்த வேறொரு டாக்டர் பார்த்தார். )

மார்ச் கடைசியில் checkupக்கு சென்றபோது, குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டது, இனிமேல் காத்திருக்கவேண்டாம்,சிசேரியன் தான் செய்யவேண்டும், ஒரு நல்ல நாள் பார்த்து Hospital க்கு வந்துவிடு என டாக்டர் கூறினார். அதன்படி, ஏப் 3ம் தேதி நல்ல நாளாக இருந்ததால், சுதாவை 2ம் தேதி இரவு Isabel Hospital ல் அட்மிட் செய்தோம். 3ம் தேதி காலை 7 மணி சுமாருக்கு, சுதா ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயானாள்.

2வது பேத்தி பிறந்த சந்தோஷமும்,அவளை பார்க்க நீ இல்லையே என்ற வருத்தமும் ஒரு சேர வந்து,அழுதேன். எல்லோரும், நீயே வந்து பிறந்திருக்கிறாய் என்று மறுபடியும் சொன்னார்கள் ( மஹதி பிறந்தபோதும் சோன்னார்கள்). எப்படியா கிரிஜா, குழந்தை பார்க்க அழகாக இருந்தாள், உன்னைப்போலவே.

5ம் நாள் சுதா, குழந்தை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்கள். டாக்டரின் advice படி, குழந்தை பிறந்து 27 ம் நாள் தான் (30 4 10 ) புண்யாகவாசனம் செய்தோம்.As usual, நம் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.வழக்கம் போலவே, நம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சுதா,சந்தர்,குழந்தையை ஆசிர்வாதம் செய்தார்கள்.குழந்தைக்கு, தர்ஷிணி என்று பெயர் வைத்திருக்கிறோம்.குழந்தைக்கு நாய் காசு, தாயத்து செய்து போட்டேன்.குழந்தையை கொண்டு விடும் போது Gold Chain வாங்கி போட்டேன்.

ப்ரசவத்திற்கு உதவிக்காக, சுபா ப்ரசவத்திற்கு, 3 நாட்கள் முன் வந்திருந்து, சுதாவை பார்த்துகொண்டாள்.சாவித்திரியும், ரமாவும் வந்திருந்து சுதாவையும், குழந்தையையும்,வீட்டையும் 10/15 நாட்கள் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி.

குழந்தை பிறந்து சுமார் 5 மாதங்கள் என்னுடன் இருந்தாள். ஆடி மாதம், அவளையும், குழந்தையையும், அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டேன். சுபா மே கடைசியில் பூனா திரும்பிய பிறகு,நானும் சுதாவுமே குழந்தையை பார்த்துக்கொண்டுவிட்டோம்.

கடவுள் கிருபையாலும் உன் ஆசியாலும், மீண்டும் ஒரு முக்கிய கடமை நல்லவிதமாக முடிந்தது. நன்றி.

மறுபடியும் சந்திப்போம்,

உன் அன்புள்ள

சுகவனம்


No comments:

Post a Comment